நடப்பு ஐ.சி.சி-2023 உலகக்கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதலில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.
நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐ.சி.சி-2023 உலகக்கிண்ண போட்டியில் 12வது போட்டியான இன்று (14.10.2023) நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்டன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சார்பாக அப்துல்லா ஷபிக் 20(24) ஓட்டங்களை எடுத்து மொஹமட் சிராஜ்ஜின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். அவரோடு துணை வீரராக இறங்கிய இமாம்-உல்-ஹக் 36(38) ஓட்டங்களுக்கு ஹர்டிக் பாண்டியாவின் பந்துவீச்சில் கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் பாபர் அசாம் 50(58) ஓட்டங்களுக்கும் மொஹமட் ரிஸ்வான் 49(69) ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க 42.5 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது. பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ஹர்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை தமது அபாரமான பந்து வீச்சின் மூலம் எடுத்துக்கொண்டனர்.
192 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இறங்கிய இந்திய அணி சார்பில் டெங்கு காய்ச்சலில் இருந்து குணமாகி வந்த சுப்மன் கில் 16(11) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் சர்மா அபாரமாக துடுப்பெடுத்தாடி 86(63) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதோடு இந்திய அணி சார்பில் விராட் கோலி 16(18) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் 19(29) ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 53(62) ஓட்டங்களையும் பெற்று 30.3 ஓவரில் 03 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து இந்திய அணி 07 விக்கெட்டுகளால் வெற்றியை தனதாக்கி கொண்டது. 05 விக்கெட்டுகளை எடுத்த பிறகு தான் செல்பி எடுப்பேன் என கூறிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷாஹீன் அபிரிடிக்கு இது பெரிய ஏமாற்றமாக மாறியது.